
Toronto-வில் பரபரப்பு: கார் கடத்தல் விசாரணையின் போது துப்பாக்கிச் சூடு - அதிகாரி, சந்தேக நபர் காயம்
Canada-வின் Toronto நகரில், கார் கடத்தல் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் காவல்துறை அதிகாரி ஒருவரும், சந்தேக நபர் ஒருவரும் காயமடைந்ததாக Peel பிராந்திய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. Etobicoke பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Humberline Drive மற்றும் Finch Avenue West சந்திப்புக்கு அருகே, அதிகாலை சுமார் 3:20 மணியளவில், கார் கடத்தல் விசாரணை மேற்கொண்டிருந்த Peel பிராந்திய காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்றைக் கண்டறிந்தனர்.
வாகனத்தில் இருந்தவர்களைக் கைது செய்ய முற்பட்டபோது, நிலைமை மோதலாக மாறியுள்ளது. அப்போது, காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், 20 வயதுடைய சந்தேக நபர் காயமடைந்தார். இந்த மோதலின் போது மேலும் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பலர் தப்பியோடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்த சந்தேக நபர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரியின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், சந்தேக நபரின் காயம் கவலைக்கிடமாக இருப்பதாக பின்னர் உறுதி செய்யப்பட்டது.
காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதால், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை Ontario-வின் சிறப்பு புலனாய்வுப் பிரிவான SIU (Special Investigations Unit) ஏற்றுக்கொண்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைகளால் மரணம் அல்லது தீவிரமான காயம் ஏற்படும் சம்பவங்களை விசாரிக்கும் ஒரு சுயாதீன அமைப்பே SIU ஆகும். தப்பியோடியவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாகத் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
