Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

Canada-வின் York பிராந்தியத்தில் பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
Canada

Canada-வின் York பிராந்தியத்தில் பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்

By MadushanJune 9, 2026

Canada-வின் York பிராந்தியத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கான பயணச் செலவுகள் அதிகரிக்கவுள்ளன. எதிர்வரும் ஜூலை மாதம் 1-ம் திகதி முதல், York Region Transit (YRT) சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வானது, பயணச்சீட்டின் வகையைப் பொறுத்து 8 முதல் 15 சென்ட்கள் வரை வேறுபடும். York பிராந்தியத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மூன்று சதவீத கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக உயர்ந்துள்ள இயக்கச் செலவுகளைச் சமாளிக்க இந்த உயர்வு அவசியமாகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டண விபரங்களின்படி, ரொக்கம், கடன் அல்லது பற்று அட்டை வாயிலாகச் செலுத்தப்படும் ஒருமுறைப் பயணக் கட்டணம் $4.50-லிருந்து $4.65 ஆக உயர்கிறது. Presto அட்டையைப் பயன்படுத்தும் பெரியவர்களுக்கான கட்டணம் 12 சென்ட்கள் அதிகரித்து $4.24 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 13 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான Presto பயணக் கட்டணம் பத்து சென்ட்கள் அதிகரித்து $3.29 ஆகவும், மூத்த குடிமக்கள் மற்றும் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் எட்டு சென்ட்கள் உயர்ந்து $2.60 ஆகவும் மாறும். ஐந்து மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் முன்பைப்போலவே தொடர்ந்தும் இலவசமாகப் பயணிக்கலாம்.

இந்தக் கட்டண அதிகரிப்பானது, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும் உதவும் என York Region Transit தெரிவித்துள்ளது. குறிப்பாக, மத்திய அரசின் நிதி உதவியுடன் புதிய மின்சாரப் பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் இந்த வருமானத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் எனவும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio