
கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்காவின் 'USS Canberra' போர்க்கப்பல் வருகை - கேந்திர முக்கியத்துவம் என்ன?
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, அதிநவீன Independence ரக கடலோரப் போர்க்கப்பலான 'USS Canberra' (LCS-30), உத்தியோகபூர்வ விஜயமாக வெள்ளிக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினர், தங்களது பாரம்பரிய மரபுகளுக்கு அமைவாக கப்பலுக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர்.
கப்பலின் கட்டளை அதிகாரி, கமாண்டர் ஜேம்ஸ் மெக்ஐவர் தலைமையிலான குழுவினர், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலான தமது பணிகளின் ஒரு அங்கமாக கொழும்பில் தங்கியிருப்பர். இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், எரிபொருள் நிரப்புதல் மற்றும் ஏனைய தளவாட வசதிகளைப் பெற்றுக்கொள்வதாகும். 'USS Canberra' கப்பலானது, அதிவேகம், ஆழமற்ற நீர்நிலைகளிலும் இயங்கும் வல்லமை மற்றும் நவீன தாக்குதல் ஆயுதங்களைக் கொண்ட ஒரு பன்முகப் போர்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் இலங்கைக்கான விஜயங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில், 'USS Tulsa', 'USS Charleston' மற்றும் 'USS Santa Barbara' ஆகிய கப்பல்களைத் தொடர்ந்து கொழும்புக்கு வருகை தந்துள்ள நான்காவது கடலோரப் போர்க்கப்பல் இதுவாகும். இது அமெரிக்கா மற்றும் இலங்கை இடையேயான கடல்சார் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்று வருவதையே சுட்டிக்காட்டுகிறது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டிகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த விஜயம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் கீழ், இப்பிராந்தியத்தில் சுதந்திரமான மற்றும் தடையற்ற கடல் வழிப் போக்குவரத்தை உறுதி செய்வதில் இலங்கையின் துறைமுகங்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கப்படுகின்றன. இவ்வாறான விஜயங்கள், பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை வலுப்படுத்தவும், நட்பு நாடுகளுடனான இயங்குதிறனை மேம்படுத்தவும் அமெரிக்கா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இந்த விஜயமானது, அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஊக்குவிப்பதில் இலங்கையின் முக்கிய பங்கை அமெரிக்கா அங்கீகரிப்பதாகவும், அதற்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்க உறுதியுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
