
கனடா குடியேற்றத்தில் முக்கிய மாற்றம்: கியூபெக்கின் PEQ திட்டம் மீண்டும் அறிமுகம் - ஆயிரக்கணக்கானோருக்கு புதிய வாய்ப்பு
இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோரின் குடியேற்றத் தெரிவாக விளங்கும் கனடாவின் Quebec மாகாணத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. Premier Christine Fréchette தலைமையிலான CAQ அரசாங்கம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய PEQ (Quebec Experience Program) திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக நிறுத்தப்பட்டிருந்த இத்திட்டத்தின் மீள்வருகை, கனடாவில் குடியேறக் காத்திருப்போருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இப்புதிய அறிவிப்பின் மூலம், சுமார் 8,000 முதல் 12,000 பேர் வரை தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக குடியேற்றத்துறை அமைச்சர் François Bonnardel தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படாததால், இந்த எண்ணிக்கை 14,000 வரை உயரக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக வெளியான 1,25,000 பேர் தகுதி பெறுவார்கள் என்ற மதிப்பீடுகள் குறித்து விளக்கமளித்த அவர், "அவை ஆரம்பகட்ட மதிப்பீடுகளே; தற்போதைய தகுதிக்கான கால அளவை நாங்கள் துல்லியமாக்கியுள்ளோம்," என்றார்.
Quebec மாகாணத்தில் தற்காலிகமாகப் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அங்குள்ள கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்கள் ஆகிய இரு தரப்பினரும், நிரந்தர வதிவிட உரிமைக்கான Quebec தேர்வுச் சான்றிதழை (CSQ) விரைவாகப் பெற PEQ திட்டம் வழிவகுத்தது. இத்திட்டம் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக PSTQ (Skilled Worker Selection Program) அறிமுகப்படுத்தப்பட்டபோது, குடியேற விரும்பிய ஆயிரக்கணக்கானோர், குறிப்பாக இலங்கை, இந்திய மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த மாற்றம் வர்த்தக சமூகத்தினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
மீண்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதல் கட்ட விண்ணப்பங்கள், கடந்த காலத்தில் திட்டம் நிறுத்தப்பட்டபோது தகுதிகளைப் பூர்த்தி செய்திருந்தவர்களுக்காகத் திறக்கப்படும். இந்த விண்ணப்பக் காலம் ஜூலை 2-ஆம் திகதி முதல் அக்டோபர் 31-ஆம் திகதி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும், அதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் இத்திட்டம் மூன்றாவது ஆண்டிற்கும் நீட்டிக்கப்படலாம் என அமைச்சர் Bonnardel சுட்டிக்காட்டினார்.
Quebec அரசாங்கத்தின் வருடாந்த குடியேற்ற இலக்குகளை அடைவதை உறுதிசெய்யும் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 45,000 பேரை வரவேற்பது அரசின் இலக்காகும். இதில் 29,000 பொருளாதாரக் குடியேறிகள், 10,000 குடும்ப இணைப்பு முறையிலான குடியேறிகள் மற்றும் 6,000 அகதிகள் அடங்குவர். 29,000 பொருளாதாரக் குடியேறிகளில் தலா 14,500 பேர் PEQ மற்றும் PSTQ திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படலாம் என்றும், விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இதில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அமைச்சர் Bonnardel குறிப்பிட்டார்.
முன்னர் PEQ திட்டத்தை நிறுத்தியது தவறான முடிவா என செய்தியாளர்கள் வினவியபோது, அதற்கு அமைச்சர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. எவ்வாறாயினும், நீண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, அரசாங்கம் தனது முந்தைய முடிவிலிருந்து பின்வாங்கி அதே திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அறிவிப்பு, கனடாவில் குடியேறும் கனவுடன் காத்திருக்கும் இலங்கை, இந்தியத் தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோருக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
