
ஜெர்மனியில் இருந்து அமெரிக்க படைகளை குறைக்க Donald Trump மிரட்டல்: NATO கூட்டணியில் விரிசல்
அமெரிக்க அதிபர் Donald Trump, NATO நட்பு நாடான ஜெர்மனிக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போரில் ஜெர்மன் அதிபர் ப்ரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) காட்டும் அதிருப்தியால், அங்குள்ள அமெரிக்க ராணுவப் படைகளின் எண்ணிக்கையை விரைவில் குறைக்கப்போவதாக Trump சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். "ஜெர்மனியில் உள்ள துருப்புக்களைக் குறைப்பது குறித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது; இது குறித்த முடிவு மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்படும்" என Trump தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைமைத்துவத்தால் அமெரிக்கா "அவமானப்படுத்தப்படுவதாக" மெர்ஸ் (Merz) இந்த வார தொடக்கத்தில் விமர்சித்திருந்தார். மேலும், இந்தப் போரில் வாஷிங்டனிடம் முறையான வியூகம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த Trump, இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போரில் அமெரிக்காவிற்கு உதவ மறுக்கும் NATO அமைப்பு மீதும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தனது முதல் பதவிக்காலத்தின் போதும், பாதுகாப்புக்காக ஜெர்மனி மிகக் குறைந்த அளவே செலவிடுவதாகக் கூறி அங்கிருந்த துருப்புக்களைக் குறைக்க Trump முயன்றார். 2020 ஜூன் மாதம் சுமார் 9,500 வீரர்களைத் திரும்பப் பெற அவர் திட்டமிட்டிருந்த நிலையில், 2021-ல் பொறுப்பேற்ற ஜோ பைடன் (Joe Biden) அந்த முடிவை ரத்து செய்தார். தற்போது மீண்டும் அதே பாணியிலான மிரட்டலை டிரம்ப் Trump கையில் எடுத்துள்ளார்.
ரம்ஸ்டீன் விமான தளம் (Ramstein Air Base) மற்றும் லேண்ட்ஸ்டூல் பிராந்திய மருத்துவ மையம் (Landstuhl Regional Medical Center) போன்ற முக்கிய ராணுவக் கட்டமைப்புகள் ஜெர்மனியில் உள்ளன. இதற்கிடையில், பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20% பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பா பெரும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்து வருவதாக மெர்ஸ் (Merz) கவலை தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் குறித்து Trump கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். "ஜெர்மனி அதிபர் ப்ரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்கிறார்; அவருக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை" என்று சாடிய Trump, ஜெர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதற்கும் இதுவே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
