
நிதி நெருக்கடியை சமாளிக்க Canada Post நடவடிக்கை: சுமார் 5 லட்சம் முகவரிகளுக்கு நேரடி தபால் விநியோகம் நிறுத்தம்
நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கிலும், சேவைகளை நவீனப்படுத்தும் முயற்சியிலும் Canada Post ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Canada முழுவதும் சுமார் 485,000 வீடுகளுக்கான நேரடி தபால் விநியோகத்தை நிறுத்தி, 2027-ஆம் ஆண்டுக்குள் அவற்றை சமூக அஞ்சல் பெட்டிகள் (community mailboxes) முறைக்கு மாற்றவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாற்றப்படவிருக்கும் 136,000 முகவரிகளுடன் சேர்த்து இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. Canada Post வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அடுத்தகட்ட மாற்றமானது Nova Scotia, New Brunswick, Quebec, Ontario, Manitoba, Alberta மற்றும் British Columbia ஆகிய ஏழு மாகாணங்களில் உள்ள 37 சமூகங்களைப் பாதிக்கும்.
இந்த மாற்றத்தால் Ontario மாகாணமே அதிகளவில் பாதிக்கப்படவுள்ளது. அங்கு 158,000-க்கும் மேற்பட்ட முகவரிகள் புதிய முறைக்கு மாற்றப்படும். இதற்கு அடுத்தபடியாக Quebec மாகாணத்தில் 139,000 முகவரிகளும், British Columbia-வில் 81,000 முகவரிகளும், Alberta-வில் 56,000 முகவரிகளும் இந்த மாற்றத்திற்கு உள்ளாகும். Nova Scotia, New Brunswick மற்றும் Manitoba ஆகிய மாகாணங்களில் தலா 17,000 முகவரிகள் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களை 2027-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளுக்காக, உள்ளூர் அரசாங்கங்களுடன் வரும் வாரங்களில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க Canada Post திட்டமிட்டுள்ளது. மாற்றம் செய்யப்படவுள்ள தபால் குறியீடுகளின் முழுமையான பட்டியல், Canada Post நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 485,000 முகவரிகள், Canada Post-இன் ஐந்தாண்டு தேசிய திட்டத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மொத்தம் நான்கு மில்லியன் (40 லட்சம்) முகவரிகளை சமூக அஞ்சல் பெட்டி முறைக்கு மாற்றுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் நிதி நெருக்கடி மற்றும் வருவாய் இழப்புக்கு மத்தியில் Canada Post இந்த முடிவை எடுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும், அதன் அனைத்து வணிகப் பிரிவுகளிலும் வருவாய் சரிந்ததால், வரிக்கு முந்தைய நிலையில் $205 மில்லியன் நஷ்டத்தைச் சந்தித்தது. வீடுகளுக்கு நேரடியாக தபால் விநியோகிப்பதை விட, சமூக அஞ்சல் பெட்டிகளுக்கு விநியோகிப்பது செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்பதால், இந்த நடவடிக்கை நிறுவனத்தின் நிதிச் சுமையைக் குறைக்கும் என Canada Post நம்புகிறது.
புதிய சமூக அஞ்சல் பெட்டிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகளை உறுதி செய்யும் முழுப் பொறுப்பையும் Canada Post ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் பனியை அகற்றுவது, பூட்டுகளைப் பழுதுபார்ப்பது அல்லது மாற்றுவது உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் தாமே மேற்கொள்ளும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
