
விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் கோர விபத்து: உருகிய இரும்பு திரவம் வெடித்து 9 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் நிறுவனத்திற்குச் சொந்தமான உருக்கு ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொதிக்கும் இரும்புத் திரவம் வெடித்துச் சிதறியதில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலையின் எஸ்எம்எஸ்-2 பிரிவிலிருந்து எஸ்டிசி-3 பகுதிக்கு, சுமார் 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலான உருகிய இரும்புக் குழம்பை ஒரு ராட்சத கொள்கலனில் கொண்டு செல்லும் பணி நேற்று மாலை 4:15 மணியளவில் நடைபெற்றுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த கொள்கலன் வெடித்து, கொதிக்கும் இரும்புத் திரவம் நாலாபுறமும் சிதறியது. இந்த கோர விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாராவ், பிரபாகர் ராவ், கிருஷ்ணா, ரமணா, அப்பல் ராவ், த்ரிநாத், குமார் உள்ளிட்ட 7 பேர் மற்றும் அடையாளம் காணப்படாத இருவர் என மொத்தம் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேரும் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையின் சிறப்புத் தீக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
விபத்து நடந்த பகுதியை மாநில உள்துறை அமைச்சர் வங்களபூடி அனிதா நேரில் பார்வையிட்டார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் அதிகாரி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.
