
பெங்களூருவில் கோரத்தாண்டவமாடிய ஆலங்கட்டி மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று மாலை பெய்த அதிபயங்கர ஆலங்கட்டி மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்தில், பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநகரம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடீரென வானிலை மாறியது. பலத்த இடி, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் அதிகளவில் ஆலங்கட்டிகள் விழுந்தன.
சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக் மற்றும் ஹெப்பால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 7 மணி வரை நீடித்த இந்த கனமழையினால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பலத்த காற்றினால் சாலையோர மரங்களும், மின் கம்பங்களும் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும், மின்தடையும் ஏற்பட்டது.
இந்த கனமழையின் போது, சிவாஜி நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பவுரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்தச் சமயத்தில் மழைக்காகச் சுவரோரம் ஒதுங்கி நின்றவர்கள் மற்றும் சாலையோரக் கடைக்காரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்தத் துயரச் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மழை பெய்து கொண்டிருந்த நிலையிலேயே முதல்வர் சித்தராமையா விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
