
மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு: சந்தையில் தர்பூசணி தேவை சரிவு
தெற்கு மும்பையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தர்பூசணி பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தையில் தர்பூசணி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மும்பையைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் (35), மகள்கள் ஆயிஷா (16) மற்றும் ஜைனப் (13) ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவு தங்கள் வீட்டில் நடந்த உறவினர்கள் சந்திப்புக்குப் பிறகு தர்பூசணி பழம் சாப்பிட்டுள்ளனர். பழம் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பூர்வாங்க அறிக்கையில், அவர்கள் உட்கொண்ட உணவில் ஏற்பட்ட நச்சு (Food Poisoning) காரணமாகவே இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோடை காலத்தின் உச்சத்தில் தர்பூசணி பழங்களின் தேவை வழக்கமாக அதிகமாக இருக்கும். ஆனால், இந்த மரணச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, ஆசியாவின் மிகப்பெரிய மொத்த விவசாய சந்தைகளில் ஒன்றான நவி மும்பை வேளாண் உற்பத்தி சந்தையில் (ஏபிஎம்சி) தர்பூசணியின் தேவை திடீரென சரிந்துள்ளது. மக்கள் தர்பூசணி வாங்குவதைத் தவிர்ப்பதால் சந்தைக்கு வரும் பழங்கள் தேக்கமடைந்துள்ளன.
பொதுவாக ஒரு கிலோ தர்பூசணி மொத்த விலையில் ரூ.10 முதல் ரூ.35 வரையிலும், சில்லறை விலையில் ரூ.30 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த அச்சம் காரணமாகவே பொதுமக்கள் தர்பூசணி வாங்குவதைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
