
ஈச்சிலம்பற்று படுகொலை: 38 ஆண்டுகள் நிறைவு, நீதி வழங்கப்படாத அவலம்
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்றுப் பகுதியில், இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரச் சென்ற அரச அதிகாரிகள் உள்ளிட்ட 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடிய சம்பவத்தின் 38ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி, உள்நாட்டுப் போர் நிலவிய காலப்பகுதியில், ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை, மாவடிச்சேனை ஆகிய கிராமங்களின் அகதி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்காக, சேருவில பகுதியிலிருந்து உலர் உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கொண்ட குழுவொன்று பயணித்தது.
சேருவில - மகிந்தபுரம் பகுதியில் இக்குழுவினர் பயணித்தபோது, ஆயுதக் குழுவொன்றினால் வழிமறிக்கப்பட்டு கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்தத் தாக்குதலை அரச படைகளும் ஊர்காவல் படையினருமே நடத்தியதாக, சம்பவத்தில் உயிர் தப்பியவர்களும் அப்பகுதி மக்களும் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். எனினும், இப்படுகொலை இடம்பெற்று 38 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுகுறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமலும் இருப்பது பெரும் வேதனையளிப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் இந்நாளன்று அவர்களது உறவினர்களும் பொதுமக்களும் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிழக்கு மாகாணத் தமிழர்கள் போர்க்காலத்தில் எதிர்கொண்ட கொடூரங்களின் ஒரு நீங்காத வடுவாக இச்சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
