Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட சர்வதேச கும்பல் கைது!
Sri Lanka

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட சர்வதேச கும்பல் கைது!

By MadushanJune 11, 2026

குவைத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் அதிரடி நடவடிக்கைகளின்போது, பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரைக் கொண்ட இந்தக் கும்பலை வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் நாட்டினர், ஒரு இந்தியர் மற்றும் நாடற்ற இருவர் அடங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சர்வதேசக் கும்பல், குவைத் முழுவதும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இயக்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்தக் கும்பலிடமிருந்து சுமார் 2.55 கிலோகிராம் ஹஷீஷ், 150 கிராம் ஹெரோயின், 20 கிராம் மெத்தம்பேட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விற்பனைக்குத் தயாராக இருந்த 6,350 லிரிகா மாத்திரைகள், 150 ஸானக்ஸ் மாத்திரைகள், 50 மெத்தடோல் மாத்திரைகள், போதைப்பொருள் பொதி செய்யும் உபகரணங்கள் மற்றும் நான்கு டிஜிட்டல் தராசுகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது நடவடிக்கையின் போது அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக சந்தேக நபர் ஒருவரின் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான ஏழு பேரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையைப் பயன்படுத்தி, சிலரை பணத்துக்காக சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தமது வலையில் வீழ்த்தி வருகின்றன. இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட அரச அமைப்புகள் தொடர் விழிப்புணர்வு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

குவைத்தின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் சட்ட நடவடிக்கை பாயும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் நாடு தழுவிய சோதனைகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio