
மேட்டூர் அணை திறப்பு தாமதம்: குறுவை சாகுபடிக்காக ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
காவிரி டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு நீர்மட்டம் குறைவாக இருப்பதால் திறப்பது தாமதமாகியுள்ளது. தென்மேற்குப் பருவமழை தாமதம் மற்றும் 'எல் நினோ' தாக்கத்தால் நீர்வரத்து குறைந்த நிலையில், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.56 அடியாகவும், நீர் இருப்பு 41.52 டிஎம்சியாகவும் மட்டுமே உள்ளது. இதனால், குறித்த தேதியில் அணையைத் திறக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையைச் சமாளித்து, குறுவை நெல் சாகுபடியை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இச்சிறப்புத் திட்டத்தின் கீழ், காவிரி டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரிப் பருவ நெல் சாகுபடியை முன்னெடுக்க ரூ.57.33 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் நிலையில், இத்திட்டத்தின் மூலம் வடிமுனைக் குழாய்க் கிணறுகளைப் பயன்படுத்தி சுமார் 3.55 லட்சம் ஏக்கர் வரையிலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 5.48 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி மேற்கொள்ள முடியும் என அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த சிறப்புத் தொகுப்பு உதவிகளைப் பெற்று, நெல் உற்பத்தியைப் பெருக்கிப் பயனடையுமாறு முதலமைச்சர் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
