
அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் 06 பேர் விடுதலை – எஞ்சியவர்களுக்காகத் தொடரும் பேச்சுவார்த்தை
ஓமன் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய சரக்குக் கப்பலில் இருந்த 06 மாலுமிகள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளதாக ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் கொடியுடன் பயணித்த 'தூஸ்கா' என்ற கொள்கலன் கப்பலை, கடந்த ஏப்ரல் 20-ஆம் திகதி அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை உத்தரவுகளைப் பின்பற்ற குறித்த கப்பல் மறுத்த காரணத்தினால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு விளக்கமளித்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட அந்தக் கப்பலில் மொத்தம் 28 ஈரானிய மாலுமிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 6 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 22 மாலுமிகளையும் மீட்கும் நோக்கில் ஈரானிய அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து, அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதுடன், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சியால் கடந்த ஏப்ரல் மாதம் 08-ஆம் திகதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, 11-ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. ஈரானிடமிருந்து புதிய யோசனைகள் முன்வைக்கப்படும் வரை, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாகப் போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேசமயம், கடந்த 13-ஆம் திகதி முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானியக் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான கடல்வழி முற்றுகையை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
