
சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்ட வழக்கு: சொல்லிசை கலைஞர் சனேல் சதானந்தன் பிணையில் விடுதலை
சமூக ஊடகங்களில் வெளியிட்ட சொல்லிசைப் பாடல் ஒன்று தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சனேல் சதானந்தன், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது கைது, நாடு முழுவதும் கலைஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த அக்டோபர் 2ஆம் திகதி, சாவகச்சேரி ஆலயம் ஒன்றில் பக்திப் பாடலுடன் தனது சொல்லிசையை இணைத்து காணொளியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சனேல் சதானந்தனின் கைது, கருத்து மற்றும் கலைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனக் கூறி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களின் தொடர் அழுத்தம் மற்றும் சட்ட நகர்வுகளைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் தலையிட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 120ஆம் பிரிவின் கீழ் (அரசுக்கு எதிராக அதிருப்தியைத் தூண்டுதல்) விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார். இது இவ்வழக்கின் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இதனையடுத்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் சனேல் சதானந்தனை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகம் மற்றும் கலைஞர்களின் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதங்களை இந்த வழக்கு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
