
இலவசக் கல்வியைப் பாதுகாக்கக் கோரி மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய துண்டுப்பிரசுரப் போராட்டம்
மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஒன்றுகூடிய கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், அங்கிருந்து மட்டக்களப்பு நகர் வரை பேரணியாகச் சென்று பொதுமக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களை வழங்கும் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இலங்கையின் இலவசக் கல்வி முறையைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மாணவர்கள் தொடர்ச்சியாகத் தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர். முன்னைய ஆட்சிக் காலத்தில் இத்திட்டங்களைக் கடுமையாக எதிர்த்த தற்போதைய ஆட்சியாளர்கள், கடந்த புதன்கிழமை (29) இது தொடர்பில் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் பாராமுகமாக இருந்து வருவதாக மாணவர்கள் இதன்போது விசனம் தெரிவித்தனர்.
"சிஸ்டம் சேஞ்" (System Change) என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்திற்கும், கடந்த கால அரசாங்கங்களுக்கும் இடையில் கொள்கை ரீதியாக எந்த மாற்றமும் இல்லையென்பதை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளதாக மாணவர்கள் சுட்டிக்காட்டினர். நாட்டில் நிலவும் தற்போதைய சிக்கலான சூழ்நிலைகளால் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது மருத்துவத் துறையில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஒன்றியத்தின் முக்கிய பிரதிநிதிகள் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர். "இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பிரச்சாரத்தின் மூலம், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களால் ஏற்படக்கூடிய சமூகப் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
