Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

பிள்ளைகளின் ஜீவனாம்ச வழக்கு: கால அவகாசம் கோரிய நடிகர் ரவி மோகன் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்
Entertainment

பிள்ளைகளின் ஜீவனாம்ச வழக்கு: கால அவகாசம் கோரிய நடிகர் ரவி மோகன் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்

By MadushanJune 9, 2026

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையேயான விவாகரத்து வழக்கில், பிள்ளைகளின் கல்வி மற்றும் இதர செலவுகளுக்காக இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவது குறித்த மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, அந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2024 முதல் தனது பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு ரவி மோகன் பணம் செலுத்தவில்லை எனக் கூறி, இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடக் கோரி ஆர்த்தி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது உடனடியாக விசாரணை நடைபெறாததால், ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குழந்தைகளின் கல்வி நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஆர்த்தியின் மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி ரவி மோகன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குழந்தைகளின் நலன் கருதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தலையிட மறுத்து, ரவி மோகனின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தையே அணுகுமாறும் அறிவுறுத்தினார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio