
பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி தொடரும் போராட்டம்: வலிகாமம் வடக்கில் இராணுவத் தலைமையகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) எட்டாவது வாரமாகத் தொடர்ந்தது. காங்கேசன்துறையில் உள்ள இராணுவத்தின் கொமாண்டோ படைப் பிரிவுத் தலைமையகத்திற்கு முன்பாகத் திரண்ட காணி உரிமையாளர்கள், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம், வலிகாமம் வடக்கின் 249, 251, 255, 256 மற்றும் 248 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். 34 ஆண்டுகள் கடந்தும், யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் ஆகியும், அவர்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பூர்வீக நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
சுமார் 651 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இப்பகுதி, தொடர்ந்தும் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயக் கட்டுப்பாட்டில் உள்ளது. "இராணுவமே வெளியேறு", "எமது நிலம் எமக்கு வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், தமது நிலங்கள் விடுவிக்கப்படாதது குறித்து அவர்கள் தீவிர விரக்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
தமது காணிகள் மீளக் கிடைக்கும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்தப் போராட்டத்தைத் தொடரப்போவதாக மக்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். மேலும், தாம் இடம்பெயர்ந்து 34 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில், எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். தமது பல தசாப்த கால அவலத்திற்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே இவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
