Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

வல்வெட்டித்துறையில் வெடித்தது போராட்டம்: பாடகர் சங்கீதன் விடுதலைக்கு வலுக்கும் குரல்கள்
Sri Lanka

வல்வெட்டித்துறையில் வெடித்தது போராட்டம்: பாடகர் சங்கீதன் விடுதலைக்கு வலுக்கும் குரல்கள்

By MadushanJune 8, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளம் சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி, பொலிஸாரின் கடும் எச்சரிக்கைகளையும் மீறி வல்வெட்டித்துறையில் மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்துப் பாடல் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடந்த வாரம் சங்கீதன் கைது செய்யப்பட்டார். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை இடம்பெற்ற இப்போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 'கலைஞனை சிறைப்படுத்தாதே', 'பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்திற்கு முன்னதாக, ஏற்பாட்டாளர்களை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, போராட்டத்தைக் கைவிடுமாறு பொலிஸார் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. தடையை மீறினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன. இந்நிலையில், சங்கீதனின் கைது இந்த விமர்சனங்களுக்கு வலுச் சேர்த்துள்ளதுடன், சர்வதேச கண்டனங்களைப் பெற்றுள்ள இச்சட்டத்தை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio