Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

திமுக அரசின் சாதனைகளுக்கு தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
India

திமுக அரசின் சாதனைகளுக்கு தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

By MadushanJune 12, 2026

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழக முதல்வர் பட்டியலிட்ட மாநிலத்தின் சாதனைகள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியின் உழைப்பால் விளைந்தவை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தற்போதைய அரசு, அந்தச் சாதனைகளின் மீது 'ஸ்டிக்கர்' ஒட்டி உரிமை கொண்டாடுவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாகத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாகப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள், இன்று டெல்லிக்குச் சென்று மாநிலத்தின் சாதனைகளாக ஒரு நீண்ட பட்டியலை வாசித்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், பணிக்குச் செல்லும் பெண்களில் 42% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பெண் கல்வி மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் என முதல்வர் அடுக்கிய சாதனைகள் எல்லாம், அவரது ஒரு மாத கால ‘சோஃபா மாடல்’ ஆட்சியில் கிடைத்தவையா? அல்லது ஐந்தாண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பலனாக விளைந்தவையா? என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்,” எனவும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு மற்றும் மேகேதாட்டு அணைப் பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். “தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும்தான் உலகமா?' எனக் கேட்டவர், தற்போது நீட் விலக்கு கோரி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அதுபோலவே, டெல்லி வரை சென்றும், கர்நாடகாவில் உள்ள தனது புதிய கூட்டணிக் கட்சியிடம் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேசாமல் திரும்பியது ஏன்?” என்றும் அவர் வினவியுள்ளார்.

“மொத்தத்தில், கழக அரசின் சாதனைகளின் மீது தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. பொய்களையும் அவதூறுகளையும் பரப்பிப் பெற்ற இந்த வெற்றி நீண்ட காலம் நிலைக்காது. உண்மை ஒருநாள் நிச்சயம் வெல்லும்,” என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio