
நேருவின் சாதனை முறியடிப்பு - மோடிக்கு குடியரசு தலைவர், துணை தலைவர் வாழ்த்து
இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பவர் எனும் சாதனையை நிகழ்த்தியதற்காக நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மிக நீண்ட கால பிரதமர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறியடித்துள்ளார். பொதுத்தேர்தலுக்குப் பின் 1952 மே 13-ம் தேதி பதவியேற்று மறையும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. 2014 மே 26-ம் தேதி பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, இன்றுடன் தொடர்ச்சியாக 4,399 நாட்களாக பிரதமர் பதவியில் உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சாதனையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பணியாற்றும் தனித்துவமான பெருமையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய மக்கள் உங்கள் தலைமை மீது வைத்துளள நீடித்த நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் ஒரு சான்றாக இந்த தருணம் விளங்குகிறது.
ஆட்சி நிர்வாகம், பொருளாதார மீட்சி, சமூக மாற்றம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உங்கள் பதவிக்காலம் சிறந்து விளங்குகிறது. பரந்த அளவிலான நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்து, வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளன. ஏழைகளின் முன்னேற்றத்துக்கான கொள்கைகளை வலுவாகக் கடைப்பிடிப்பதை இவை பிரதிபலிக்கின்றன. உங்கள் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளில் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான பிஎம் - ஜன்மான் திட்டமும், பழங்குடி கிராமங்களை மேம்படுத்தும் Aaba Janjatiya Gram Utkarsh திட்டமும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளன.
உங்கள் எழுச்சியூட்டும் பயணம், இந்தியாவின் வலுவான ஜனநாயக மரபுகளில் நம்பிக்கையையும் உறுதியையும் தொடர்ந்து விதைக்கிறது. நீங்கள் தொடர்ந்து தேசத்துக்கு சேவையாற்றி, தற்சார்பு இந்தியா, ஆற்றல் மிக்க இந்தியா எனும் இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்த நீங்கள் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
